இந்தியா

கெஜ்ரிவால், கவிதா நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

கிழக்கு நியூஸ்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதா கடந்த மார்ச் 15-ல் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை இவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இதன்பிறகு, இவரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, இவர் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இவரது நீதிமன்றக் காவல் மே 7 வரை நீட்டிக்கப்பட்டது.

இதே வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இவரையும் அமலாக்கத் துறை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இதன்பிறகு, இவருடைய நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஏப்ரல் 15-ல் இவரது நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், இவருடைய நீதிமன்றக் காவல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தால் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டது.

இதுவும் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, இவரது நீதிமன்றக் காவலும் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.