கவிதா (கோப்புப்படம்) 
இந்தியா

மதுபானக் கொள்கை வழக்கு: கவிதாவுக்குப் பிணை வழங்க தில்லி நீதிமன்றம் மறுப்பு

கிழக்கு நியூஸ்

தில்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளில் பிணை வழங்க தில்லி சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கோரி கவிதா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவிதா சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, விக்ரம் சௌதரி உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

தில்லி மதுபானக் கொள்கையில் கவிதாவை வெளிப்படையாக தொடர்புபடுத்துவதற்காக மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள், விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம், கவிதாவுக்கு எதிராக மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த முறைகேட்டில் கவிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணை அமைப்புகளுக்கு நன்கு தெரியும் என்று பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரித்தார். இதுதொடர்பான விரிவான உத்தரவு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த வழக்கில் கவிதா கடந்த மார்ச் 15-ல் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இவருடைய நீதிமன்றக் காவல் மே 7-ல் நிறைவடைகிறது.