இந்தியா

வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்

ராம் அப்பண்ணசாமி

போலிச் சான்றிதழ் விவகாரத்தில் முன் ஜாமீன் கிடைக்காததால் முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேத்கர், சட்டவிரோதமாக மாற்றுத்திறனாளி சான்றிதழையும், ஓபிசி சான்றிதழையும் சமர்ப்பித்தது, அதை வைத்து அகில குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் பணியைப் பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவரைப் பயிற்சிப் பணியில் இருந்து விடுவித்தது மாநில அரசு.

இதனைத் தொடர்ந்து முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி பூஜா கேத்கருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி அவர் மீது தில்லியில் மோசடி வழக்குத் தொடர்ந்தது. மேலும் பூஜா சமர்ப்பித்திருந்த மாற்றுத்திறனாளி சான்றிதல் குறித்து விசாரணை நடத்தும்படி புனே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளையும் மீறி சட்டவிரோதமான முறையில் பூஜா கேத்கர் கலந்து கொண்டதை யுபிஎஸ்சி உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து 2022 அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் பூஜா கேத்கர் பெற்ற தேர்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ள பூஜாவுக்கு நிரந்தத் தடைவிதிக்கப்படுவதாகவும் கடந்த ஜூலை 31-ல் அறிவித்தது யுபிஎஸ்சி.

இதற்கிடையே, சான்றிதழ் மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பூஜா கேத்கர். அவரது முன்ஜாமீன் மனு நேற்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, பூஜா கேத்கர் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.