ANI
இந்தியா

பாஜகவில் இணைகிறேன்: சம்பாய் சோரன் அறிவிப்பு

முதலில் அரசியலில் இருந்து விலகவே நினைத்தேன். ஆனால் மக்கள் அளித்த ஆதரவு காரணமாக அந்த முடிவை மாற்றிக்கொண்டேன்

ராம் அப்பண்ணசாமி

தில்லியில் இன்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, பாஜகவில் தான் இணையப்போகும் செய்தியை உறுதிபடுத்தியுள்ளார் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சம்பாய் சோரன்.

இது தொடர்பாக தலைநகர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சம்சாய் சோரன், `கடந்த ஆகஸ்ட் 18-ல் வந்தபோது, எனது நிலைப்பாடு குறித்து விளக்கியிருந்தேன். முதலில் அரசியலில் இருந்து விலகவே நினைத்தேன். ஆனால் மக்கள் அளித்த ஆதரவு காரணமாக அந்த முடிவை மாற்றிக்கொண்டேன்.

பிறகு தனிக்கட்சி தொடங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது இருக்கும் நம்பிக்கையால் நான் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளேன்’ என்றார்.

இதைத் தொடர்ந்து `வரும் ஆகஸ்ட் 30-ல் பாஜகவில் இணைய உள்ளீர்களா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் என்று பதிலளித்தார் சம்பாய் சோரன். பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சம்பாய் சோரன் சந்தித்துப் பேசும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

முன்பு, `ஜார்க்கண்ட மாநில முன்னாள் முதல்வரும், நம் நாட்டின் தன்னிகரற்ற பழங்குடியின தலைவர்களில் ஒருவருமான சம்பாய் சோரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துள்ளார். அதிகாரபூர்வமாக வரும் ஆகஸ்ட் 30-ல் ராஞ்சியில் வைத்து அவர் பாஜகவில் இணைகிறார்’ என்று தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.

67 வயதான சம்பாய் சோரன் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நீர்வளம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.