நடந்து முடிந்த மஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.
கடந்த நவ.20-ல் 288 இடங்களைக் கொண்ட மஹாராஷ்டிர சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவானதாக மறுநாள் தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடைசியாக 1995-ல் அம்மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் 71.6 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதன்பிறகு 5 முறை சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் தற்போது நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதமே அதிகமாகும். இந்நிலையில், நவ.20 வாக்குப்பதிவின்போது மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் 55 ஆக இருந்தது. இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 66.05 ஆக இருந்ததாக மறுநாள் தகவல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவுபெறும். இதனால் ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 11 சதவீதம் வரை (பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு) வாக்குப்பதிவு உயர்ந்துள்ளதை முன்வைத்து இந்தியா டுடே ஊடகத்துடனான பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.
இது குறித்து பேசியுள்ள குரேஷி, `தேர்தலில் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் உடனுக்குடன் வாக்கு மையத்தில் பதிவு செய்யப்படும். ஆனால் வாக்குப்பதிவு சதவீதத்தில் மறுநாள் நடந்துள்ள இந்த வேறுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்து அனைவரும் யோசிக்க ஆரம்பித்தால், இந்த அமைப்பு மீதான நம்பிக்கை தகர்ந்துவிடும்’ என்றார்.
இதேபோல, கடந்த மக்களவை தேர்தலிலும் இறுதி வாக்கு சதவீதம் 5 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்ததாக குற்றம்சாட்டியது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏ.டி.ஆர்).