ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். 2022 நவம்பரில் மத்திய அரசின் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டவர் அருண் கோயல். 2027 வரை அருண் கோயலுக்குப் பதவிக் காலம் உள்ள நிலையில் தனது பதவியைத் திடீரென அவர் ராஜினாமா செய்தார். அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மூன்று உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள். ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர். மற்ற இருவரும் தேர்தல் ஆணையர்கள்.
அவருடைய பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த சனிக்கிழமை இவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். இதனால் இரு தேர்தல் ஆணையர் பதவிகள் காலியாக இருந்தன. மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் இருந்தார்.
தற்போதைய புதிய நடைமுறையின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் உள்துறைச் செயலர் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலர் அடங்கிய குழு இந்தப் பதவிகளுக்கு தலா 5 பெயர்களைப் பரிந்துரை செய்யும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி அடங்கிய குழு இரு பெயர்களைத் தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்.
தேர்தல் ஆணையர்களைப் பரிந்துரை செய்ய பிரதமர் நரேந்திர மோடி, சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி ஆகியோர் அடங்கிய குழு இன்று காலை கூடியது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஞானேஷ் குமார் கடந்த பிப்ரவரியில் மத்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். சுக்பீர் சிங் சாந்து உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்துள்ளார்.