இந்தியா

நீட் தேர்வில் அலட்சியம் இருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டும்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

கிழக்கு நியூஸ்

நீட் தேர்வை நடத்துவதில் ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து 0.001% அலட்சியம் இருந்தாலும்கூட, தேசிய தேர்வு முகமை அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்தது, முறைகேடு நடந்தது, சர்ச்சைக்குரிய கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது போன்ற முந்தைய வழக்குகளைப்போல நீட் தேர்வு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 6-ல் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறவுள்ளதால், வினாத் தாள் கசிவு தொடர்புடைய விசாரணையின் நிலை குறித்து அறிவது அவசியமானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுமுறைக் கால அமர்வு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்வி பாடி ஆகியோர் இந்த மனுவை விசாரித்தார்கள்.

"நீட் தேர்வை நடத்துவதில் ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து 0.001% அலட்சியம் இருந்தாலும்கூட, அதை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். தேர்வை நடத்தும் அமைப்பாக நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். தவறு இருந்தாலும், ஆம் தவறு நடந்தது என அதை ஒப்புக்கொள்ள வேண்டும். தவறு நேர்ந்ததால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளோம் எனக் கூற வேண்டும். குறைந்தபட்சம், உங்களுடைய செயல்பாடுகள் மீது இது நம்பிக்கையைப் பெற்றுத் தரும்" என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

மேலும், "முறைகேடு செய்து ஒருவர் மருத்துவரானால், அவர் இந்தச் சமூகத்துக்கு எந்தளவுக்கு தீங்கானவராக இருப்பார் என்பதை உணர வேண்டும். இதுமாதிரியான கடினமான போட்டித் தேர்வுகளில் குழந்தைகள் எந்தளவுக்குக் கடின உழைப்பைப் போடுகிறார்கள் என்பது தெரியும்" என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதுதொடர்பாக இரு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 8-க்கு ஒத்திவைத்தது.