இந்தியா

14 ஆயிரம் கோடியை மீட்ட பிறகும்..: நிதியமைச்சர் அறிவிப்புக்கு விஜய் மல்லையா கேள்வி

கடனுக்கு இருமடங்கு அதிக மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையும், வங்கிகளும் எந்த வகையில் என்னிடமிருந்து மீட்டன என்பதை சட்டப்பூர்வமாக விளக்க வேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

தனக்கு எதிரான ரூ. 6,203 கோடி கடனுக்கு ஈடாக, ரூ. 14,131 கோடியை வங்கிகள் மீட்டுக்கொண்ட பிறகும்கூட, தாம் இன்னமும் அறிவிக்கப்பட்ட பொருளாதார குற்றவாளியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார் லண்டனில் வசித்துவரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா.

2024-2025-ம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் மக்களவையில் நேற்று (டிச.19) நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு பொருளாதார குற்ற வழக்குகள் தொடர்பாக சுமார் ரூ. 22,280 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை அமலாக்கத்துறையால் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ. 14,131.6 கோடி மதிப்பிலான சொத்துகளை பொதுத்துறை வங்கிகள் மீட்டுக்கொண்டதாக தகவல் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

இந்த அறிவிப்பு தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடனுக்கு நிகராக ரூ. 1,200 கோடி வட்டி உள்ளிட்ட ரூ. 6,203 கோடியை மீட்க கடன் மீட்பு தீர்பாயம் உத்தரவிட்டது. ரூ. 6,203 கோடி கடனுக்கு ஈடாக, ரூ. 14,131 கோடியை வங்கிகள் மீட்டுக்கொண்டதாக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். ஆனால் இன்னமும் நான் பொருளாதார குற்றவாளி என்ற நிலையில் இருக்கிறேன்.

கடனுக்கு இருமடங்கு அதிக மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையும், வங்கிகளும் எந்த வகையில் என்னிடமிருந்து மீட்டன என்பதை சட்டப்பூர்வமாக விளக்கும் வரை, எனக்கு உரிய நிவராணம் தேவை. அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுவேன்’ என்றார்.