தொழிலாளர் வைப்பு நிதியில் (இபிஎஃப்) இனி 100% பணத்தை எடுக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று (அக்.13) நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இபிஎஃப் திட்டத்தின் கீழ் பகுதியளவு பணத்தை எடுத்துக் கொள்வதை எளிமைப்படுத்தும் விதமாக ஏற்கெனவே இருந்த 13 அம்சங்கள் 3 வகைப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம் ஆகிய அத்தியாவசிய தேவைகள், வீட்டுத் தேவைகள் மற்றும் பிரத்யேக சூழல்கள் ஆகியவற்றில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த புதிய முன்னெடுப்பின்படி கல்வித் தேவைக்கு 10 முறையும், திருமணத் தேவைக்கு 5 முறையும் பணம் எடுத்துக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பகுதியளவு பணத்தை எடுத்துக் கொள்ளும் குறைந்தபட்ச சேவைகள் 12 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரத்யேக சூழல்களில் பணம் எடுக்க காரணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் காரணங்களையும் குறிப்பிடத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உறுப்பினர்கள் தங்களது இபிஎஃப் கணக்கில் 25% குறைந்தபட்ச சேமிப்பு வைத்திருக்க வேண்டும் என்று இருந்த விதியும் தளர்த்தப்பட்டு, தற்போது இபிஃபொல் உள்ள நிலுவைத் தொகையில் 100% வரை பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இபிஎஃபில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வுகாண விஸ்வாஸ் திட்டம், இபிஎஃப்ஓவின் கடனை 5 ஆண்டுகளுக்கு முறையாக நிர்வகிக்க 4 நிதி மேலாளர்களை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.