கோப்புப்படம் 
இந்தியா

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை: குடியரசுத் தலைவர் முதல்முறையாகக் கண்டனம்!

அனைவரும் போராடிக் கொண்டிருக்க, குற்றவாளிகள் எங்கோ சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்டனம்.

கிழக்கு நியூஸ்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குடியரசுத் தலைவர் முதன்முறையாக இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"நம் மகள்களும், சகோதரிகளும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாவதை எந்தவொரு நாகரிகமான சமூகமும் அனுமதிக்காது. மாணவர்கள், மருத்துவர்கள், குடிமக்கள் கொல்கத்தாவில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், குற்றவாளிகள் எங்கோ சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நடந்தவரை போதும்.

12 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு எண்ணற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இந்தச் சமூகம் மறந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் 20 நாள்களுக்கு முன்பு பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. மேற்கு வங்கத்தில் இன்னும் போராட்டம் நடைபெற்று வருகிறது.