இந்தியா

சிறையில் இருக்கும் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்கலாம்: தேசிய பாதுகாப்பு முகமை

தீவிரவாதத்துக்கு நிதி அளித்த விவகாரத்தில் உஃபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரஷீத், பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ராம் அப்பண்ணசாமி

சிறையில் உள்ள அப்துல் ரஷீத் ஷேக் மக்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொள்ளலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எஞ்சினியர் ரஷீத் என்றழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷேக். ஆனால் தேசிய பாதுகாப்பு முகமையால் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடமாக சிறையில் உள்ள காரணத்தால் ரஷீத்தால் மக்களவை எம்.பி.யாகப் பதவியேற்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து மக்களவை எம்.பி.யாகப் பதவியேற்க இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்குமாறு தேர்தல் வெற்றிக்குப் பிறகு தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தை அணுகினார் ரஷீத். ரஷீத் பதவியேற்பதற்கு ஏதுவாக மூன்று தேதிகளை வழங்குமாறு தேசிய பாதுகாப்பு முகமைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது பாட்டியாலா நீதிமன்றம்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஜூலை 5 அன்று அப்துல் ரஷீத் எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொள்ளலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமையின் வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் ஊடகத்தில் பேசக் கூடாது போன்ற சில நிபந்தனைகளை ரஷீத்துக்கு விதிக்கவேண்டும் என்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் சார்பில் பட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டியாலா நீதிமன்றத்தின் நீதிபதி சந்தர் ஜித் சிங் இந்த வழக்கு விவகாரத்தில் நாளை (ஜூலை 2) தீர்ப்பளிக்கவுள்ளார். தீவிரவாதத்துக்கு நிதி அளித்த விவகாரத்தில் உஃபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரஷீத், பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.