Space X Elon Musk Starlink: எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவில் இணைய சேவையை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்டார்லிங்க் முதல் தலைமுறை (Gen 1) செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி இந்தியாவில் இணைய சேவையை வழங்க, புது தில்லியில் உள்ள ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) அனுமதியளித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது இந்த செயற்கைகோள்களின் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் வரை (எது முதலில் வருகிறதோ), இந்த அனுமதி செல்லுபடியாகும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் ஊரகப் பகுதிகளில்கூட செயற்கைக்கோள்களின் மூலம் அதிவேக இணைய வசதியைக் கொண்டு வருவதில் இந்த முடிவு ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிப்பதாக, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அரசாங்கத் துறைகள் தொடர்புடைய அனுமதிகள், ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களுக்கு உட்பட்டு, இணைய சேவை வழங்கும் பணிகளை ஸ்டார்லிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
4,408 செயற்கைக்கோள்களைக்கொண்ட ஸ்டார்லிங்கின் முதல் தலைமுறை (Gen 1) செயற்கைக்கோள் தொகுப்பு, தரையில் இருந்து சுமார் 540 முதல் 570 கி.மீ. வரையிலான உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வருகின்றது. நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் அதிவேக இணைய வசதியை வழங்குவது ஸ்டார்லிங்கின் நோக்கமாகும்.