ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் ஆட்சி: மோடி வாழ்த்து ANI
இந்தியா

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் ஆட்சி: மோடி வாழ்த்து

யோகேஷ் குமார்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு மே 13-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஆட்சியிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகப் பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யானின் ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. தெலுங்கு தேசம் 131 இடங்களிலும், ஜன சேனா 20 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 இடங்களில் 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆட்சி அமைப்பது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் மோடி ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார். இந்நிலைய்ல் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.