ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, அடுத்த இந்திய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
`மருத்துவ ஆலோசனையின்படி உடல் நலனுக்கு முன்னுரிமை அளித்து’ இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவியை கடந்த ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் 2022 முதல் குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் பணியாற்றி வந்த தன்கர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியை ராஜினாமா செய்தது பேசுபொருளானது.
இதைத் தொடந்து, ஜூலை 22 அன்று குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர், பதவியேற்கும் தேதியில் இருந்து முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று (ஆக. 1) வெளியிட்ட அட்டவணையின்படி, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும், அதேநேரம் செப்டம்பர் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
15-வது குடியரசுத் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல், `1952 குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி நடைபெறவுள்ளது.