உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி முன்னிலை! ANI
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பாஜக பின்னடைவு!

யோகேஷ் குமார்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்த நிலையில், 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் இண்டியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 36 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் இரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

சமாஜவாதி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் 10 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜவாதி 5 இடங்களில் வெற்றி பெற்றது. அப்னா தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக மட்டும் 65 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 69 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.