இந்தியா

நாடு முழுக்க வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்?: செப். 10-ல் முக்கியக் கூட்டம்! | Election Commission

தலைமைத் தேர்தல் அலுவலர்கள் தங்களுடைய மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்து எடுத்துரைக்கவுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

நாடு முழுக்க வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் செப்டம்பர் 10 அன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி தேர்தல் ஆணையத்தால் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் சிறப்பு தீவிர திருத்தத்தால் நீக்கப்பட்டன. இதில் ஆட்சேபனை இருந்தால், அதைத் தெரிவிக்க செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தில் ஆதாரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை செட்பம்பர் 8 அன்று வருகிறது.

இந்நிலையில் தான் நாடு முழுக்க சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. ஜனவரி 1, 2026-க்குள் நாடு முழுக்க சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. கடந்த ஜூன் 24-ல் தேர்தல் ஆணையத்திடமிருந்து வெளியான உத்தரவில், நாடு முழுக்க சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் முதற்கட்டமாக பிஹாரில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அலுவலர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் கடந்த பிப்ரவரியில் பொறுப்பேற்ற பிறகு, தலைமைத் தேர்தல் அலுவலர்களுடன் நடத்தப்படும் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இது. சிறப்பு தீவிர திருத்தத்தை நாடு முழுக்க மேற்கொள்வதற்கான தயார் நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. தலைமைத் தேர்தல் அலுவலர்கள் தங்களுடைய மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கவுள்ளார்கள்.

Election Commission of India | Election Commission | Gyanesh Kumar | Special Intensive Revision | SIR | Voter List SIR | Bihar SIR |