சிறப்பு தீவிர திருத்தப் பணி ANI
இந்தியா

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அடுத்தது என்ன? | Bihar | SIR | Election Commission

பிஹாரில் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 7.23 கோடி பேரிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ராம் அப்பண்ணசாமி

பெருமளவு வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குரிய `சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR)’ ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்ட பிஹார் மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியல், இன்று (ஆக. 1) வெளியிடப்பட்டது.

90,817 வாக்குச் சாவடிகளில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளுடனும் 38 மாவட்ட ஆட்சியர்கள் பகிர்ந்துகொண்டனர்.

பிஹார் வாக்காளர் பட்டியலைத் திருத்த கடந்த ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை அம்மாநில மக்களுக்கிடையே பரவலான பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற திருத்தம் கடைசியாக 2003-ல் பிஹாரில் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பிஹாரில் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 7.23 கோடி பேரிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

வாக்காளர்கள் இறந்துபோனது அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்தது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமைக்கு பதிவு செய்தது அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பது போன்றவை கண்டறியப்பட்டதால், சுமார் 64 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்தது என்ன?

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் முதல் கட்டம் தற்போது முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இன்று (ஆகஸ்ட் 1) முதல் செப்டம்பர் 1 வரை வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை வாக்காளர்கள் எழுப்பலாம்.

இந்த காலகட்டத்தில், வாக்காளர்கள் தங்கள் தகுதியை நிறுவ, தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து, குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். இந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர்கள் தவறாக விடுபட்டுள்ளதாகக் கருதும் வாக்காளர்கள், அதற்கான தீர்வைப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம்.