இந்தியா

பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

கிழக்கு நியூஸ்

மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"எக்ஸ் தளத்தில் விடியோ பதிவிட்டு மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக ஜெயாநகர் காவல் நிலையத்தில் பாஜக எம்.பி.யும், பெங்களூரு தெற்கு பாஜக வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞரும், பாஜக சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளருமான வசந்த் குமார் கூறியதாவது:

"தேர்தல் ஆணையத்துக்கு இன்று 5 புகார்கள் வந்துள்ளன. மைசூரில் வாக்குச் சாவடியில் வாக்கு சேகரித்தது மற்றும் பேசியது தொடர்பாக புகார் வந்துள்ளது. முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக ஒரு புகார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் போராட்டம் நடத்தியதாகவும் ஒரு புகார் வந்துள்ளது" என்றார் அவர்.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேஜஸ்வி சூர்யா பெங்களூருவில் தனது வாக்கை செலுத்தினார். இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 30 இடங்களில்கூட வெற்றி பெறாது என்று தெரிவித்தார்.