அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை தொடர்புடைய சட்டத்தைக் கொண்டு வரும்போதே அதை எதிர்த்ததாகவும் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் அதைக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாள் பயணமாக ஒடிஷா சென்றுள்ள அகிலேஷ் யாதவ், புரி ஜெகந்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்குச் செல்லும் முன் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீகாந்த் ஜெனாவைச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"காங்கிரஸ் கட்சி தான் அமலாக்கத் துறை சட்டத்தை உருவாக்கியது. அந்த சமயத்தில் பல்வேறு கட்சிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்தன. உங்களுக்கே பின்னாளில் பிரச்னையாக மாறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால், அமலாக்கத் துறை போன்ற துறைகள் ஒழிக்கப்பட வேண்டும். வருமான வரித் துறை போன்ற துறைகள் இருக்கும்போது அமலாக்கத் துறையின் தேவை என்ன?
மற்ற மாநிலங்கள் குறித்து என்னால் பேச முடியாது. ஆனால், மஹாராஷ்டிரம் குறித்து என்னிடம் தகவல் உள்ளது. அங்கு பாஜகவை எதிர்க்கும் தலைவர்களை அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறையின் நடவடிக்கையிலிருந்து பாதுகாக்க முடியாது" என்றார் அகிலேஷ் யாதவ்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நேரத்தில் அகிலேஷ் யாதவ் இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.