இருமல் மருந்து விவகாரம்: உரிமையாளருக்குச் சொந்தமான ரூ. 2.04 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை 
இந்தியா

இருமல் மருந்து விவகாரம்: உரிமையாளரின் ரூ. 2.04 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | Coldrif |

மருந்து தயாரிப்பில் தரமற்ற மூலப்பொருள்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது....

கிழக்கு நியூஸ்

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து நிறுவனத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான ரூ. 2.04 கோடி சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் சிந்த்வரா மாவட்டத்தில் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மத்தியப் பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தை உட்கொண்டதுதான் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இச்சம்பவத்தில் கோல்ட்ரிஃப் மருந்தைக் குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இருமல் மருந்தைத் தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீசன் ஃபார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ. 2.04 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“மத்திய பிரதேசத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்த வழக்கில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான இரண்டு குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ரூ. 2.04 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகம் தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில், ஸ்ரீசன் நிறுவனம், அதன் உற்பத்தி செலவுகளை அடக்கவும், லாபத்தை அதிகரிக்கவும், மருந்துகளை தயாரிப்பதில், தரமற்ற மூலப்பொருள்களை, உரிய சோதனைகள் இல்லாமல் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவற்றைப் பதிவு செய்யாமல் பணம் கொடுத்து கொள்முதல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தபோதிலும், மருந்து மற்றும் அழகுசாதன விதிகளின்படி கட்டாயப்படுத்தப்பட்ட வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பது விசாரணையில் மேலும் தெரியவந்தது. ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளர், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், உரிமம் வாங்குவதில் ஈடுபட்டுள்ள முகவர்கள் மற்றும் பிறருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை முன்னதாக சோதனை நடத்தியது. அப்போது ​​நிதி நடவடிக்கைகள், கலப்படம் செய்யப்பட்ட உற்பத்தி தொடர்பான பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Chennai Zonal Office has provisionally attached immovable properties worth Rs. 2.04 Crore (approx.) on 2/12/2025 in the form of two residential flats at Kodambakkam, Chennai belonging to G. Ranganathan, proprietor of M/s Sresan Pharmaceutical Manufacturer