ANI
இந்தியா

ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலர், டிஜிபி-க்கு தேர்தல் ஆணையம் அழைப்பாணை

கிழக்கு நியூஸ்

ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு தேர்தல் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுமாதிரியான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்காக முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைதியை நிலைநாட்டுவதற்காக தேர்தல் நடத்தை விதிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும், தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ல் நடைபெற்றது.

தெனாலியைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார், வாக்குச் சாவடியில் வரிசையில் நின்ற ஒருவரைத் தாக்கியதால் சர்ச்சை உருவானது. சம்பந்தப்பட்ட நபர் மது அருந்திவிட்டு சாதிய ரீதியிலான கருத்துகளைக் கூறி வந்ததாகவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம்சாட்டினார். இதனிடையே, பால்நாடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஒன்றில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது.