இந்தியா

14 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி மாற்றம்

தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

கேரளம், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் 14 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13-க்கு பதில் நவம்பர் 20 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பின்போது, 15 மாநிலங்களிலுள்ள 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 15 அன்று இடைத்தேர்தல் அறிவித்தது. நவம்பர் 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நவம்பர் 13 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கேரளத்தில் பாலக்காடு தொகுதி, பஞ்சாபிலுள்ள அனைத்து 4 தொகுதிகள் மற்றும் உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து 9 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

திருவிழாக்களை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்குமாறு பாஜக, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தக் கருத்துகளின் அடிப்படையில் தேர்தல் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.