Election Commission announces bye-elections for 4 Rajya Sabha seats in J-K, 1 in Punjab 
இந்தியா

காலியாக இருந்த 4 மாநிலங்களவை இடங்களுக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல்: தாமதம் ஏன்? | Rajya Sabha Election |

4 இடங்களுக்கும் அக்டோபர் 24 அன்று தேர்தல் நடைபெறுகிறது.

கிழக்கு நியூஸ்

ஜம்மு-காஷ்மீரில் 4 ஆண்டுகளாகக் காலியாக இருக்கும் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.

இந்த 4 இடங்களுக்கும் அக்டோபர் 24 அன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் மீர் முஹமது ஃபயாஸ், நசீர் அஹமது லவாய், பாஜக எம்.பி. ஷம்ஷேர் சிங், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குலாம் நபி ஆசாத் ஆகியோருடைய பதவிக் காலம் கடந்த பிப்ரவரி 2021-ல் நிறைவடைந்தது.

இதனிடையே, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. எனவே, மாநிலங்களவைத் தேர்தலும் நடத்தப்படவில்லை. 90 இடங்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்குக் கடந்தாண்டு தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், காலியாகவுள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். 4 இடங்களின் பதவிக்காலமும் மூன்று வெவ்வேறு சுழற்சியைச் சேர்ந்தவை. எனவே, மூன்று தேர்தல்களாக நடத்தப்பட வேண்டும் என்பது விதி.

இதுதொடர்புடைய தேர்தல் அறிவிக்கை அக்டோபர் 6-ல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 13. வேட்புமனுக்கள் அக்டோபர் 14 அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவைத் திரும்ப் பெற அக்டோபர் 16 கடைசி நாள். அக்டோபர் 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் vs தேவேஷ் சந்திரா தாக்குர் & மற்றவர் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் புதிதாகத் தேர்வாகும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஜம்மு-காஷ்மீரிலிருந்து மக்களவைக்குத் தேர்வான 5 உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர் மட்டுமே ஜம்மு-காஷ்மீர் சார்பில் வாக்களித்தார்கள்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சீவ் அரோரா அமைச்சரவையில் இணைவதற்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். எனவே, பஞ்சாபில் காலியாக உள்ள இந்த இடத்துக்கும் மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jammu Kashmir | Election Commission | Rajya Sabha Elections |