ANI
இந்தியா

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

கிழக்கு நியூஸ்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யும் நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். நாளை முதல் ஜூன் 1 பிற்பகல் வரை பிரதமர் தியானம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வது தேர்தல் நடத்தை விதிமீறலுக்கு எதிரானது என்று கூறி மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுகவின் வழக்கறிஞர் பிரிவினர் தங்களுடைய மனுவில், "தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி தரக் கூடாது. தேர்தல் பிரசாரத்தின் வியூகமாகவே இது நாடு முழுக்கப் பிரதிபலிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தில்லியில் தேர்தல் ஆணையம் சென்று பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு எதிராகப் புகாரளித்துள்ளார்கள்.

தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:

"தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, அடுத்த 48 மணி நேரத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரசாரம் செய்ய யாரையும் அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளோம். மௌன விரதமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, பிரசார தடைக்காலத்தில் அது மறைமுக பிரசாரமாக இருக்கக் கூடாது. மே 30 மாலை முதல் மௌன விரதம் இருக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பதற்கு எதிராக நாங்கள் புகாரளித்துள்ளோம்.

மே 30 மாலை 7 மணி முதல் பிரசார தடைக்காலம் தொடங்குகிறது. இது தேர்தல் நடத்தை விதிமீறலுக்கு எதிரானது. தேர்தல் பிரசாரம் செய்வதற்கும், தன்னை பற்றிய செய்திகள் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் நீடிப்பதற்குமான யுத்திதான் இது. ஜூன் 1-க்கு பிறகு அவர் தனது மௌன விரதத்தை மேற்கொள்ளலாம்.

ஒருவேளை நாளைய தினமே மௌன விரதத்தைத் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினால், அதை எந்தவொரு காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும் செய்தியாக வெளியிடக் கூடாது. இதற்குத் தடைவிதிக்க வேண்டும்" என்றார் அபிஷேக் மனு சிங்வி.