இந்தியா

துல்கர், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை: 2 கார்கள் பறிமுதல் | Dulquer Salmaan | Prithviraj Sukumaran |

வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை...

கிழக்கு நியூஸ்

கேரளத்தில் நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தி 2 கார்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து உரிய வரி செலுத்தாமல் உயர் ரக கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு, நாடு முழுவதும் இயக்கப்படுவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் சில, ஹிமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களின் எண்களில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவான நிலையில், இதைப் பற்றி விசாரிக்க ஆபரேஷன் நம்கூர் என்ற பெயரில் சுங்கத்துறையினர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கேரளத்தில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, கொச்சியின் பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

துல்கர் சல்மான், பிருத்விராஜ் இருவரும் இணைந்து, பூட்டானில் இருந்து உயர் ரக கார்களை இறக்குமதி செய்து வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனையில் ஆவணங்களைக் கேட்டதாகத் தெரிய வருகிறது. பின்னர் துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிபெண்டர் கார் உட்பட இரண்டு கார்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.