தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் பாராமதி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) சரத் பவார் பேரன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) சார்பாக பாராமதி தொகுதியில் அஜித் பவார் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் அஜித் பவார் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், யுகேந்திர பவாருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்காக பாராமதியில் முகாமிட்டுள்ள சரத் பவார் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து பேசியுள்ளார்.
"நான் அதிகாரத்தில் இல்லை. மாநிலங்களவையில் இருக்கிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. ஏற்கெனவே இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். இன்னும் எத்தனை தேர்தல்களில் என்னால் போட்டியிட முடியும்? புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ந்து சமூகப் பணியை மேற்கொள்வேன். குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் என் பணிகளை மேற்கொள்வேன். இந்தப் பணிகளைத் தொடர எனக்குத் தேர்தல்கள் தேவையில்லை.
மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். தேர்தலில் ஒருபோதும் நீங்கள் என்னை வீட்டுக்கு அனுப்பியதில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். எனவே, ஏதேனும் ஒரு புள்ளியில் நான் இதை நிறுத்தியாக வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அரசியலில் மட்டும் ஈடுபட வேண்டும் என முடிவு செய்தேன். அதனால், மாநிலம் தொடர்புடைய அனைத்துப் பொறுப்புகளையும் அஜித் பவாரிடம் ஒப்படைத்தேன். ஏறத்தாழ 25, 30 ஆண்டுகளாக மாநிலத்தின் பொறுப்பு அவரிடம்தான் இருந்தது. தற்போது அடுத்த 30 ஆண்டுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்றார் சரத் பவார்.