இந்தியா

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி!

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 9 ல் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் இணையமைச்சராகப் பதவியேற்ற நிலையில் அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார் சுரேஷ் கோபி.

மலையாள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், `தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி பதவி மட்டும் போதும்’ எனவும், `தொடர்ந்து சினிமாவில் நடிக்கத் தாம் விரும்புவதால் அமைச்சர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு’ கோரிக்கை விடுத்துள்ளார் சுரேஷ் கோபி.

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுனில் குமாரை 74000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் இதே திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 1.21 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் பிரதாபனிடம் தோல்வியடைந்தார். 2016-2022 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக சுரேஷ் கோபி செயல்பட்டுள்ளார். 65 வயதான சுரேஷ் கோபி 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.