மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் நலனைக் கருத்தில்கொண்டு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (பிப்.21) எழுதிய கடிதத்தில், மத்திய அமைச்சர் பிரதான் கூறியதாவது,
`நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்தியாவின் கல்விமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது மட்டுமல்லாமல், அதன் தரத்தை உயர்த்துவதும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கமாகும்.
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மத்திய அரசு பிரபலப்படுத்தும் என்று கடந்த 26 மே 2022-ல் பிரதமர் மோடி உறுதியளித்தார். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் பரப்பி வருகிறார். உலகின் பழமையான செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது நம் தேசத்திற்கே பெருமையளிக்கும் விஷயம்’
இந்தியாவின் வளமான மொழியியல் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஒவ்வொரு மாணவரும் தாய் மொழியில் தரமான கல்வியை கற்பதை தேசிய கல்விக் கொள்கை உறுதிசெய்கிறது. எந்தவொரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை.
சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழகம் முன்னொடி மாநிலமாக திகழ்கிறது. அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் சமக்ர சிக்ஷா போன்ற பல திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கையுடன் தொடர்புடையவை. தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொறுத்தமற்றது. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டன. அரசியல் வேறுபாடுகளைக் கடந்தும், கல்வி கற்கும் இளைய தலைமுறையினரை கருத்தில் கொண்டும் இந்த விவகாரத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.