இந்தியா

16 வயதுக்குள்பட்டோர் திரையரங்கு செல்ல கட்டுப்பாடுகள்: தெலங்கானா உயர் நீதிமன்றம்

"அதுவரை இரவு 11 மணிக்கு மேல் 16 வயதுக்குள்பட்டோர் படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது."

கிழக்கு நியூஸ்

தெலங்கானாவில் 16 வயதுக்குள்பட்டோரை காலை 11 மணிக்கு முன், இரவு 11 மணிக்குப் பின் திரையரங்குகளில் அனுமதிப்பது தொடர்பாக நெறிமுறைகள் வகுக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானாவில் திரைப்படங்களுக்குக் கூடுதல் காட்சிகள் மற்றும் நள்ளிரவுக் காட்சிகளுக்கு அரசு அனுமதிப்பது தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புஷ்பா 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களுக்குக் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுக்களை தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி விஜய்சென் ரெட்டி விசாரித்தார்.

நள்ளிரவுக் காட்சிகள் படம் பார்க்க 18 வயதுக்குள்பட்டோருக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, அதிகாலை மற்றும் நள்ளிரவுக் காட்சிகளில் குழந்தைகளைப் படம் பார்க்க அனுமதிப்பது அவர்களுடைய உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதிக்கக்கூடும் என்றார்.

தொடர்ந்து, மாநில அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, "திரையரங்குகளில் காலை 11 மணிக்கு முன் மற்றும் இரவு 11 மணிக்குப் பின் 16 வயதுக்குள்பட்டோருக்கான குழந்தைகள் படம் பார்ப்பதை அனுமதிப்பது தொடர்பாக நெறிமுறைகள் வகுக்கப்படுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்" என்றார். மேலும், "அதுவரை இரவு 11 மணிக்கு மேல் 16 வயதுக்குள்பட்டோர் படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது" என்று உத்தரவிட்டார்.