மாநில அரசின் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் வழங்க முன்வந்த ரூ. 100 கோடி நன்கொடையை ஏற்கமாட்டோம் என நேற்று (நவ.25) அறிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் தொழில்நுட்ப அறிவை புகட்ட திறன் பயிற்சி அளிக்கும் வகையில், திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தை (Young India Skills University) அம்மாநில அரசு புதிதாக உருவாக்கியது. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த அக்டோபரில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தப் பல்கலைக்கழகம் குறித்து ஹைதராபாத்தில் நேற்று (நவ.25) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியவை பின்வருமாறு,
`திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்திற்காக கார்ப்பரேட் சமூகப் பொறுப்புக் கொள்கையின் கீழ் ரூ. 100 கோடி நன்கொடை வழங்க அதானி குழுமம் முன்வந்தது. இந்த நன்கொடை மாநிலத்திற்கும் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் என்றாலும் தற்போது உள்ள சூழலில் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் இந்த நன்கொடையை ஏற்க வேண்டாம் என மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தொழில்துறையின் முதன்மை செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் வழியாக கடிதத்தின் மூலம் இந்த முடிவை அதானி குழுமத்திடம் தெரிவித்துவிட்டோம். நான் தில்லிக்குச் செல்வதை சிலர் கேலி செய்கின்றனர். 28 முறை நான் தில்லிக்குச் சென்றதாக கணக்குக் காட்டுகின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது. மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் நிதி கேட்க செல்கிறேன். இனியும் செல்வேன்’ என்றார்.