இந்தியா

மஹாராஷ்டிர தேர்தலில் களமிறங்கும் இடஒதுக்கீடு ஆர்வலர்: பாஜக, காங். கூட்டணிகளுக்கு சிக்கலா?

2018-ல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு.

ராம் அப்பண்ணசாமி

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடிவரும் மனோஜ் ஜாரங்கி பாட்டீல் வரும் மஹாராஷ்டிரா சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் பாஜக, காங். கூட்டணிகளுக்கு சிக்கல் எழக்கூடும் எனத் தெரிகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மராத்தா சமூகத்தினர், அம்மாநிலத்தில் முன்னேறிய வகுப்பினராக அறியப்படுகிறார்கள். மஹாராஷ்டிர மாநில மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் வரை இருக்கும் இந்த சமூகத்தினர் பொதுப்பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிற சமூகங்களைப் போல தங்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கக் கோரி பல வருடங்களாக மராத்தா சமூக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மராத்தா மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களில் முக்கியமானவர் ஷிவ்பா சங்கட்னா அமைப்பின் தலைவர் மனோஜ் ஜாரங்கி பாட்டீல். இடஒதுக்கீடு கோரி இவர் இருமுறை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.

2018-ல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு. இந்த இடஒதுக்கீட்டை கல்விக்கு 12 சதவீதமாகவும், அரசு வேலைவாய்ப்புகளுக்கு 13 சதவீதமாகவும் குறைத்தது மும்பை உயர் நீதிமன்றம்.

அதன்பிறகு 2021-ல் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதனை அடுத்து இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்தனர் மராத்தா சமூகத்தினர். இந்நிலையில் மஹாரஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 20-ல் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

இந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் மராத்தா சமூகத்தினர் உறுதியாக வெல்லும் தொகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார் மனோஜ் பாட்டீல். மஹாராஷ்டிரா மக்கள்தொகையில் 30 சதவீதம் வரை உள்ள மராத்தா சமூகத்தினரின் வாக்குகள், பல சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு கணிசமானதாகும்.

இதனால் மனோஜ் பாட்டீல் நிறுத்தும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பதிவாகும் வாக்குகள் பாஜகவின் மஹாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.