திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களின் மனங்களைப் பாஜக புண்படுத்தி வருகிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:-
“நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, மூத்த உறுப்பினரான டி.ஆர். பாலுவைப் பார்த்து மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுவதுபோல் பேசியது கண்டிக்கத்தக்கது. அதேபோல், உறுப்பினர்கள் தங்கள் பிரச்னைகளை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரமில்லா நேரத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தமிழ்நாடு அரசின் மீது காழ்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீண்ட உரையை ஆற்றினார். அதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாஜகவைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் வியூகம் என்பதே மதக் கலவரத்தை உருவாக்குவதுதான் என்பதை ஒவ்வொரு இடத்திலும் நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் மக்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்கள். இதனால் ஒரு மதக் கலவர பிரச்னையை உருவாக்கி, அரசுக்குக் கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் தங்களைத் தமிழர்களாக முதலில் உணர்ந்தவர்கள். அவர்களுக்கு யார் தங்களுக்காகப் பாடுபடுகிறார்கள், பெரும்பான்மை மக்களை பாதுகாப்பு யார், உழைப்பவர்கள் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள். அதனால் இதுபோன்ற பிரச்னைகளை உருவாக்குவது ஒரு காலத்திலும் பயன்படாது.
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பிய பொழுது அத்தனை கட்சிகளும் எங்களோடு இணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார்கள். இதே மாதிரிதான் மணிப்பூரிலும் தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய இணை அமைச்சர் கூறியது போல திருப்பரங்குன்றம் கோயிலில் யாருடைய வழிபாட்டு உரிமைகளும் பறிக்கப்படவில்லை. பலரும் சென்று வழிபட்டு வரக்கூடிய இணக்கமான சூழல்தான் நிலவுகிறது. பாஜகதான் அங்கு யாராலும் நுழைய முடியாத சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது.
ஆகம விதிகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பவர்கள், அதையெல்லாம் குழிதோண்டி புதைட்க்கும் வகையில், தீபத்திருநாள் முடிந்த அடுத்த நாள் தீபத்தை ஏற்ற முயல்வது இந்துக்களுடைய மனங்களைப் புண்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. ஆக இதில் தமிழ்நாடு அரசு யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எங்கள் மீது அத்தகைய பழியைப் போடுபவர்கள்தான் உண்மையிலேயே மக்களைப் புண்படுத்துகிறார்கள். தங்களது அரசியலுக்காக தமிழ்நாட்டு மக்களை ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார்
DMK MP Kanimozhi has said that the BJP is hurting the feelings of Hindus over the Thiruparankundram issue.