மாதந்தோறும் ரூ. 50,000 ஜீவனாம்சத்தை முன்னாள் மனைவிக்கு வழங்குமாறு, அவரது முன்னாள் கணவருக்கு கடந்த 29 மே 2025 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும், 5% அதிகரித்து வழங்கவேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்தபோது கடந்த 2016-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இடைக்கால ஜீவனாம்சத் தொகை ரூ. 20,000 ஆக இருந்தது. இந்த தம்பதிகள் 2019-ல் விவகாரத்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, தற்போது முன்னாள் மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்ச தொகையாக மாதம் ரூ. 50 ஆயிரம் உயர்த்தி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இந்த வழக்கில் மறுமணம் செய்துகொள்ளாமல் சுதந்திரமாக வாழும் மனைவி, திருமணத்தின்போது அனுபவித்த வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பராமரிப்பு நிலைக்கு தகுதியுடையவர். மேலும் இது அவரது எதிர்காலத்தை நியாயமான முறையில் பாதுகாக்கும்’ என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
`சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைக் கருத்தில் கொண்ட பிறகு, உயர் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிரந்தர ஜீவனாம்சத்தின் அளவை திருத்தவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். கணவரின் வருமானம், சொத்து மதிப்புகள் மற்றும் கடந்தகால வருவாய் ஆகியவை அவர் அதிக தொகையை செலுத்தக்கூடிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
மேலும், வீட்டின் மீது வாங்கப்பட்ட கடனை அடைத்து, வீட்டின் உரிமைப் பத்திரத்தை முன்னாள் மனைவியின் பெயருக்கு மாற்றுமாறு முன்னாள் கணவருக்கு கல்கத்தா உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அந்த முன்னாள் கணவர் எதிர்க்கவில்லை.
அதேநேரம் தனது மகனுக்கான பராமரிப்பு தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அவர் எதிர்த்தார். தனது மகனுக்கு தற்போது 26 வயது ஆகிறது என்றும், யாரையும் அவர் சார்ந்திருக்கவில்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மகனுக்குப் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளது.