பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண் டிஜிட்டல் கைது மோசடி மூலம் ஏறத்தாழ ரூ. 32 கோடியை இழந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணுக்கு முதலில் செப்டம்பர் 2024-ல் ஒரு அழைப்பு வந்துள்ளது. இவர் சாஃப்ட்வேர் துறையில் பொறியியலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரை அழைத்த மோசடிக்காரர்கள், மும்பை அந்தேரியிலுள்ள டிஹெச்எல் மையத்துக்கு இவருடைய பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளதாகவும் மூன்று கிரெட்டிட் கார்டுகள் நான்கு கடவுச் சீட்டுகள் உள்ளிட்டவை அதில் இருப்பதாகவும் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். இவர், தான் பெங்களூருவில் வசிப்பதாகவும் தனக்கும் இந்த பார்சலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இருந்தபோதிலும், இந்த பார்சலில் இவருடைய அலைபேசி எண் இணைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதால் சைபர் குற்றமாக இருக்கக்கூடும் என்று கூற, சம்பந்தப்பட்ட பெண் அஞ்சியுள்ளார்.
பிறகு, அலைபேசி அழைப்பை சிபிஐ-க்கு மாற்றுவதாகச் சொல்லி மாற்றியிருக்கிறார்கள். சிபிஐ அதிகாரியாக தன்னைக் காட்டிக் கொண்ட நபர், இப்பெண்ணுக்கு எதிராக எல்லா ஆதாரங்களும் இருப்பதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.
மேலும், உள்ளூர் காவல் துறையினரை அணுகக் கூடாது என்று மிரட்டியதால், இவர் காவல் துறையினரையும் அணுகாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் வரவிருக்கும் மகனின் திருமணம் உள்ளிட்டவை அப்பெண்ணுக்கு முக்கியமானதாகப் பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் சொன்ன அனைத்தையும் அவர் செய்ததாகத் தெரிகிறது.
ஒரு கட்டத்துக்கு மேல், இரு ஸ்கைப் கணக்குகளை இன்ஸ்டால் செய்து அதைப் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள் மோசடிக்காரர்கள். ஸ்கைப் அழைப்பு மூலம் அப்பெண்ணை மோசடிக்காரர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள். மோஹித் ஹண்டா என்பவர் இரு நாள்களுக்கு கண்காணித்து வந்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து ராகுல் யாதவ் என்பவர் ஒரு வார காலத்துக்குக் கண்காணித்துள்ளார். மற்றொருவர் தன்னை சிபிஐ-யின் மூத்த அதிகாரி என்று சொல்லி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்குமாறு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
சொத்து விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகே, இப்பிரச்னையிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். இதற்காக சைபர் குற்றப்பிரிவிருந்து போலியாக ஒரு சான்றிதழையும் கடிதத்தையும் அளித்திருக்கிறார்கள்.
கடந்தாண்டு செப்டம்பர் முதல் கடந்தாண்டு அக்டோபர் வரை தனது வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் அவர் மோசடிக்காரர்களிடம் பகிர்ந்துள்ளார். 90 சதவீத சொத்துகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இதைச் செய்தால் மட்டுமே பிரச்னையிலிருந்து இவர் விடுவிக்கப்படுவார் என்றும் கும்பல் மிரட்டியிருக்கிறது.
கடந்தாண்டு டிசம்பர் 6 அவருடைய மகனுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக, டிசம்பர் 1 அன்று பிரச்னை அனைத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டதாகப் போலியான கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
2025 தொடக்கத்திலும் மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது. இவர் செலுத்திய பணம் அனைத்தும் பிப்ரவரிக்குள் திருப்பிச் செலுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறது. மார்ச் 26-க்குப் பிறகு இந்தத் தொடர்புகள் அனைத்தும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த 187 பணப் பரிமாற்றங்களை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதில் ரூ. 31.83 கோடி மோசடிக் கும்பல் வசம் சென்றுள்ளது. இவருடைய மகன் திருமணம் ஜூன் 8 அன்று நடைபெற்றது.
இத்திருமணம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று காத்திருந்த அவர், மகன் திருமணத்தைத் தொடர்ந்து காவல் துறையினரிடம் முறையாகப் புகாரளித்துள்ளார். காவல் துறையினற் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Digital Arrest Scam | Bengaluru Woman |