ANI
இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்: அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் விலகலா?

தேசத்திற்கு நாங்கள் ஆதரவாகவே உள்ளோம். வெளியுறவு கொள்கை முடிவுகளில், எப்போதும் நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறோம்.

ராம் அப்பண்ணசாமி

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அமைக்கிறது. இந்த குழுவில் இடம்பெறவிருக்கும் தங்கள் கட்சி எம்.பி.க்கள் குறித்து தங்களிடம் மத்திய அரசு எதையும் கேட்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்துக் கட்சி குழுவில் இடம்பெறவுள்ள எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் பணி, அது கட்சியின் பணி அல்ல என்று முவைக்கப்படும் கருத்தை அவர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

மத்திய அரசால் அமைக்கப்படும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இடம்பெறுவார்கள் என்று செய்தி வெளியானது. குறிப்பாக, திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதான் அனைத்துக் கட்சி குழுவில் இடம்பெறுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தங்கள் கட்சியின் எம்.பி. குறித்து தங்களிடம் எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக மத்திய அரசு முடிவெடுத்ததால், அனைத்துக் கட்சி குழுவை புறக்கணிக்க திரிணாமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக கேட்டபோது பதிலளித்த மமதா பானர்ஜி, `எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. எங்களிடம் கேட்டிருந்தால் நிச்சயமாக ஒத்துழைப்பு அளித்திருப்போம். தேசத்திற்கு நாங்கள் ஆதரவாகவே உள்ளோம். வெளியுறவு கொள்கை முடிவுகளில், எப்போதும் நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறோம்.

ஆனால் எம்.பி.களின் பெயரை அவர்களாகவே தன்னிச்சையாக முடிவுசெய்ய முடியாது. இதை அவர்கள் தேர்வு செய்யக்கூடாது, கட்சியின் தேர்வாகவே அது இருக்க முடியும். யாரையாவது அனுப்புமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டால், நாங்கள் முடிவு செய்து அவர்களிடம் கூறுவோம். இதனால் நாங்கள் அதைப் புறக்கணிக்கிறோம் என்று எடுத்துக்கொள்ளவேண்டாம்’ என்றார்.