இயன்முறை மருத்துவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று குறிப்பிட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
நாட்டின் மருத்துவத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் இயன்முறை மருத்துவர்கள், தாங்களும் பெயர்களுக்கு முன்னால் ‘டாக்டர்’ என்ற முன்னொட்டைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் இயன்முறை மருத்துவர்களும் 'டாக்டர்’ என்ற முன்னொட்டைப் பயன்படுத்த அனுமதி அளித்தது.
ஆனால், இதற்கு மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். மேலும், இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9 அன்று மீண்டும், ‘டாக்டர்’ என்ற முன்னொட்டை இயன்முறை மருத்துவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தது. "பிசியோதெரபிஸ்டுகள் மருத்துவர்களாக பயிற்சி பெறவில்லை,. எனவே அவர்கள், தங்களை டாக்டர் என்று கூறக் கூடாது, தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது நோயாளிகளையும் மக்களையும் தவறாக வழிநடத்தும். இது போலி மருத்துவத்திற்கு வழிவகுக்கும்" என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இம்முடிவு இயன்முறை மருத்துவர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியது. ஆனால், அடுத்த நாளே சுகாதார அமைச்சகம் இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், “இயன்முறை மருத்துவம் குறித்து கூடுதலாக ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே ‘டாக்டர்’ என்ற முன்னொட்டைப் பயன்படுத்த அவர்கள் தகுதி வாய்ந்தவர்களா என்ற முடிவுக்கு வர முடியும்” என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி இவ்விவகாரம் பரிசீலனையில் உள்ளது. ஆனால், இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் நீதிமன்றத்தை அணுகவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இயன்முறை மருத்துவர்கள் ‘டாக்டர்’ எனக் குறிப்பிட்டுக்கொள்ளக் கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மருத்துவத் துறையினரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Physiotherapists | Physiotherapy | Doctor Prefix | DGHS |