திருப்பதி கோயில் (கோப்புப்படம்) ANI
இந்தியா

மாலை 6 மணிக்கு பக்தர்கள் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தானம்

கிழக்கு நியூஸ்

பக்தர்கள் மாலை 6 மணியளவில் ஷாம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என திருப்பதி கோயிலில் ஷாந்தி ஹோமம் நடத்திய அர்ச்சகர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மஹாஷாந்தி யாகம் நடத்தப்பட்டது. கோயில் பிரசாதமான லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், இன்று யாகம் மேற்கொள்ளப்பட்டது.

"கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் தயாரிக்கப்பட்ட பிரசாதம் மற்றும் லட்டுவைக் கடவுளுக்குப் படைத்து தவறிழைக்கப்பட்டது. இந்தத் தவறை சரி செய்வதற்காகவும், கோயிலின் புனிதத் தன்மையைக் காக்கவும் பிராயச்சித்தமாக மஹாஷாந்தி யாகம் நடத்தப்பட்டது. லட்டு மற்றும் பிரசாதம் தயாரிக்கப்படும் மடப்பள்ளிகளில் பஞ்சகாவியத்தைத் தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்த கோயில் வளாகமும் பஞ்ச காவியத்தால் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன" என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

ஷாந்தி ஹோமம் நிறைவடைந்துவிட்டதாக தேவஸ்தானம் தரப்பில் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணியளவில் பக்தர்கள் தங்களுடைய வீடுகளில் தீபாராதனை காட்டும்போது ஷாம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என ஷாந்தி ஹோமம் நடத்திய அர்ச்சகர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.