இந்தியா

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஃபட்னவீஸ்!

கிழக்கு நியூஸ்

மஹாராஷ்டிரத்தில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மஹாராஷ்டிரத்தில் 23 இடங்களில் பாஜக வென்றது. பாஜக கூட்டணிக் கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றன. 2024 தேர்தலில் பாஜக வெறும் 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களில் வென்றுள்ளன.

தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியான நிலையில், மாநிலத்தில் இந்தப் பெரும் சரிவு குறித்து பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மஹாராஷ்டிர பாஜக தலைமையில் முக்கியப் பங்கை வகிப்பவர் தேவேந்திர ஃபட்னவீஸ். இவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாராஷ்டிர அரசில் துணை முதல்வராகவும் உள்ளார். இவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தேர்தல் தோல்வி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ் கூறியதாவது:

"இந்தத் தோல்விக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். எனது பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்தெந்த இடங்களிலெல்லாம் பின்தங்கியிருக்கிறோமோ அதையெல்லாம் சரி செய்ய முயற்சிக்கிறேன். நான் ஓடி ஒழியக்கூடிய நபர் அல்ல. புதிய வியூகங்கள் அமைப்போம். இதை அமைத்தவுடன் மக்களிடம் சென்று அவர்களைச் சந்திப்போம்.

சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியின் செயல்பாட்டை மேம்படுத்த, நான் அமைப்பு ரீதியாக செயல்பட வேண்டியிருக்கிறது. கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த எனது முழு நேரத்தையும் நான் அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. மாநில அரசில் நான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கட்சியின் மத்தியத் தலைமையிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன்" என்றார் ஃபட்னவீஸ்.