மற்ற நாடுகளைச் சார்ந்து இருப்பதுதான் இந்தியாவின் உண்மையான எதிரி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பவநகரில் ரூ. 33,000 கோடி மதிப்பிலான கடல் சார் நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,
”தற்சார்பு தான் இந்தியா முன்னேற வழி. இந்தியா உலக நாடுகளுக்கு நண்பன் என்ற உணர்வுடன் தான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. நமக்குப் பெரிய எதிரி என்று யாரும் கிடையாது. ஒருவேளை நமக்கு எதிரி என ஒன்று இருக்குமேயானால், அது மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்கும் தன்மையே. மற்ற நாடுகளை நாம் எவ்வளவு நம்பி இருக்கிறோமோ, அவ்வளவு தோல்வி அடைவோம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் ஏற்றுமதி இறக்குமதியில் 40% இந்தியாவில் உருவாக்கப்பட்ட கப்பல்கள் மூலமே நடந்தது. ஆனால் தற்போது இந்தத் துறையும் காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைக்குப் பலியாகிவிட்டது. இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்காத காங்கிரஸ், வெளிநாட்டு நிறுவனங்களை நுழைய விட்டு வாடகை வசூலித்தது. அதனால் கப்பல் கட்டும் துறையின் சுற்றுச்சூழலே குலைந்துவிட்டது. நாமும் வெளிநாட்டுக் கப்பல்களை நம்ப வேண்டியதானது. அதன் விளைவாக தற்போது 5% இறக்குமதி, ஏற்றுமதி மட்டுமே இந்திய கப்பல்களில் நிகழ்கிறது. இது, நாம் 95% வெளிநாட்டுக் கப்பல்களையே நம்பி இருக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறது.
இந்தச் சார்பு நமக்கு சேதங்களைக் கொடுக்கிறது. அதிர்ச்சி ஏற்படுத்தும் கருத்தைச் சொல்கிறேன். நாம் வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கு வாடகையாக மட்டும் ரூ. 6 லட்சம் கோடியைக் கட்டுகிறோம். இது ஏறத்தாழ நம் நாட்டுப் பாதுகாப்புத் துறையின் முழு பட்ஜெட்டுக்கு நிகராகும்.
காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்தது. அவை இந்தியாவின் பலத்தை வெளிக்காட்ட முடியாமல் நிறுத்தி வைத்தன. கப்பல் கட்டும் துறையில் ஏற்பட்டிருக்க சேதமே அதற்கு சரியான எடுத்துக்காட்டு. கடந்த 70 ஆண்டுகளாக வாடகையாக மட்டும் இந்தியா எவ்வளவு கொடுத்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். நம் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வளர்ந்தது. அதில் சிறிய பங்கையாவது நம் நாட்டுக் கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு முந்திய காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்திருந்தால், இந்நேரம் உலக நாடுகள் நமது கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். நாம் கப்பல்களுக்கு வாடகையாக லட்சம் கோடிகளைப் பெற்றிருப்போம், நமது பணத்தையும் சேமித்திருப்போம்.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட நம் நாடு அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை நிலைநிறுத்த தற்சார்புக் கொள்கையே அவசியம். அடுத்தவரின் கருணைக்காக நாம் காத்திருக்கும் வரை, நமது தன்மானம் காயப்படத்தான் செய்யும். வருங்காலத்தின் 140 கோடி மக்களையும் அடுத்தவர் கைகளில் கைவிட்டுவிடக் கூடாது. சிப்புகளோ கப்பல்களோ அனைத்தையும் நாம்தான் தயாரிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சுயசார்பு ஒன்றே மருந்து.
இவ்வாறு தெரிவித்தார்.