நாட்டில் தற்போது எரிசக்தி நெருக்கடிக்கு மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகளே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினர்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். தில்லியில் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:-
திருமணங்களைத் தள்ளிப் போட நேரும்
“இந்தியா முழுவதும் வீடுகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு கடும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. தினசரி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள 50% வீழ்ச்சியே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணம். நம் நாட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவில் சுமார் 60% இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் சுமார் 90% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. தற்போது அது குறைந்துவிட்டது. உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் நேரடிப் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. மும்பையில் உள்ள 20% உணவகங்கள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன, மேலும் 50% நிறுவனங்கள் அடுத்த 2 நாள்களுக்குள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திருமணங்கள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால், இந்தத் தட்டுப்பாடு நீடித்தால் பலர் தங்கள் திருமணங்களைத் தள்ளிப்போட வேண்டியிருக்கும். மற்றொரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கட்டுப்பாடற்ற கறுப்புச் சந்தை வர்த்தகம்.
அணிசேராக் கொள்கையைத் தகர்த்திவிட்டார்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாக இருந்த அணிசேராக் கொள்கை, பிரதமரால் சில நாள்களிலேயே சிதைக்கப்பட்டுவிட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பின்பற்றி வந்த அணிசேராக் கொள்கை நமக்குப் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருந்தது. எந்த ஒரு உலகளாவிய அதிகார மையத்தோடும் அளவுக்கு அதிகமாக ஒட்டிக்கொள்ளாமல், அனைத்து நாடுகளுடனும் சுமுகமான உறவைப் பேணுவதே இதன் நோக்கம். ஆனால், பிரதமர் மோடி இந்தப் பாரம்பரியக் கொள்கையை முழுமையாகத் தகர்த்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவதால், இன்று சர்வதேச சந்தையில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை மாற்றமே இன்று இந்தியாவில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பிரதமருக்கு சவால்
பிரதமர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக நிற்கிறார். போர் தொடங்குவதற்கு முன்னதாகவே இஸ்ரேலுக்குச் சென்று நெதன்யாஹூவைக் கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன இருந்தது? இதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படுகிறேன், ஆனால் பிரதமர் மோடி அதிபர் டிரம்பின் அடிமையாகிவிட்டது போலத் தோன்றுகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டை அமெரிக்காவின் ஒரு காலனியாக பிரதமர் மோடி மாற்றிவிட்டார். பிரதமர் பலவீனமாக இருக்கிறார். மிரட்டலுக்கு உள்ளாகிறார். மக்கள் கோபத்தில் உள்ளனர். 'ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள்' என்று டிரம்ப் சொன்னார், பிரதமர் மோடி ”சரி ஐயா” என்றார். “இந்தியப் பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்படும், ஆனால் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி கிடையாது” என்று டிரம்ப் சொன்னார், அதற்கும் பிரதமர் மோடி “சரி ஐயா” என்றார். டிரம்பிடம் தமக்கு எதிராக ஏதோ ஒன்று இருக்கிறது, அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி கருதினால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும்." என்றார்.
"Demolishing non-alignment policy biggest mistake by PM Modi": AAP convenor Arvind Kejriwal slams Centre over LPG shortage