கோப்புப் படம்
கோப்புப் படம் ANI
இந்தியா

தில்லியில் மார்ச் மாதத்தில் நிலவும் கடுங்குளிர்

கிழக்கு நியூஸ்

தில்லியில் இன்று காலையில் வெப்பநிலை (குளிர்நிலை என்றுதான் கூறவேண்டும்) 9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட நான்கு டிகிரி குறைவு. கடந்த 13 வருடங்களில் மார்ச் மாதத்தில் பதிவான குறைவான வெப்பநிலை இது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) பகிர்ந்த தரவுகளின்படி, தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 23.4 டிகிரி செல்சியஸ். இதுவும் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் குறைவாகும். மார்ச் மாதத்தில் 2015-க்குப் பிறகு பதிவான குறைவான வெப்பநிலை இது. அடுத்த சில நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு இமயமலை பிராந்தியத்தைத் தவிர அடுத்த ஐந்து நாள்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை இருக்கும் என்றும் வானிலைத் துறை கணித்துள்ளது, மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு இமயமலைப் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை அல்லது பனிப்பொழிவு ஏற்படக்கூடும்.

தில்லியில் கடந்த சனிக்கிழமை காலையிலும் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. பல பகுதிகளில் சனிக்கிழமை காலை பலத்த காற்று அடித்து, லேசான மழை பெய்தது.