சேதமடைந்த விமானம் 
இந்தியா

பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: இண்டிகோ விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்ட விமானி, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான சர்வதேச எல்லைக்கு அருகே பறப்பதற்கு அனுமதி கோரியுள்ளார்.

ராம் அப்பண்ணசாமி

திடீர் வானிலை மாற்றத்தை அடுத்து, ஸ்ரீநகருக்கு சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் விமானி பாகிஸ்தான் வான்பரப்பில் நுழைய அனுமதி கோரியுள்ளார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்படவே, சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை ஸ்ரீநகரில் விமானி தரையிறக்கியுள்ளார்.

கடந்த மே 21 மாலையில் இண்டிகோ பயணியர் விமானம் (6ஏ-2142) ஒன்று, தலைநகர் தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிக் கிளம்பியது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிற்கு மேலே, சுமார் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை சரமாரியாக பெய்துள்ளது.

இந்த திடீர் வானிலை மாற்றத்தால் விமானம் கடுமையாக குலுங்கவே விமானத்திற்குள் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு, பயணிகள் கலக்கமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, (வடக்கு மண்டல) விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட விமானி, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான சர்வதேச எல்லைக்கு அருகே பறப்பதற்கு அனுமதி கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், லாகூரில் உள்ள பாகிஸ்தான் நாட்டு கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்ட விமானி, அந்நாட்டு வான்பரப்பிற்குள் நுழைய அனுமதி கோரியுள்ளார். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்தை தில்லிக்கு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை விமானி ஆராய்ந்துள்ளார். ஆனால் மோசமான வானியில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருந்ததால், சாதுர்யமாக விமானத்தை இயக்கி 200-க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக ஸ்ரீநகரில் அவர் தரையிறக்கியுள்ளார்.

விமானத்திற்குள் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரெக் ஓ’பிரையன், சாகரிகா கோஷ், நதிமுல் ஹக், மமதா தாகூர், மேற்கு வங்க அமைச்சர் மனஸ் பூனியா போன்ற முக்கியஸ்தர்கள் இருந்துள்ளனர்.

ஆலங்கட்டி மழையால் விமானத்தின் மூக்குப் பகுதி சேதமடைந்ததை அடுத்து, பழுதுபார்ப்புக்காக விமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக இண்டிகோ சார்பில் அறிவிக்கப்பட்டது.