ANI
இந்தியா

தில்லி தேர்தல்: 300 யூனிட் இலவச மின்சாரம் என காங்கிரஸ் வாக்குறுதி

"சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு வழங்கப்படும், இலவச ரேஷன் தொகுப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்."

கிழக்கு நியூஸ்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெறுகிறது. பிப்ரவரி 8 அன்று முடிவுகள் வெளியாகின்றன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கடந்த 6 அன்று அறிவித்தது. ஜனவரி 8 அன்று வெளியிட்ட அறிவிப்பில், ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்தது.

ஜனவரி 12 அன்று அளித்த வாக்குறுதியில் தில்லியில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

இவற்றின் தொடர்ச்சியாக இன்று மேலும் மூன்று வாக்குறுதிகளை அறிவித்துள்ளது காங்கிரஸ். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு வழங்கப்படும், இலவச ரேஷன் தொகுப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தில்லி மேலிடப் பொறுப்பாளர் காஸி நிஜாமுதீன், தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் ஆகியோர் தில்லியில் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி கூறுகையில், "மோடிக்கும் கெஜ்ரிவாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருடையப் பெயர் மட்டும் தான் வேறாக உள்ளது. ஆனால், செயல்கள் ஒன்றாக உள்ளன. இருவரும் பொய் பேசுகிறார்கள். மோடி மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார், கெஜ்ரிவால் மூன்று முறை தில்லி முதல்வராக இருந்துள்ளார். அவர்கள் தில்லிக்காக என்ன செய்துள்ளார்கள்? இன்று தில்லி வாழ்வதற்கு உகந்ததாக இல்லை. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஐந்து முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்" என்றார் ரேவந்த் ரெட்டி.