தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி 
இந்தியா

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தெலங்கானா முதல்வருக்கு சம்மன்

கிழக்கு நியூஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புடைய போலி விடியோ விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தில்லி காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தில்லி காவல் துறையின் சைபர் பிரிவு தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் அமித் ஷா குறித்து போலி விடியோ பரவி வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தில்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் அமித் ஷா குறித்த போலி விடியோவை வெளியிட்ட செல்ஃபோனுடன் நேரில் ஆஜராக வேண்டும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக முடிவுக்குக் கொண்டு வரும் என்ற அமித் ஷாவின் கருத்து, அனைத்து இடஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்படும் என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், தெலங்கானா காங்கிரஸ் தங்களுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்திருந்தது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இதனைப் பகிர்ந்திருந்தார்.