தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு  
இந்தியா

தில்லி கார் வெடிப்பு தற்கொலைத் தாக்குதலா?: காவல்துறை விசாரணை | Delhi Car Blast |

ஹரியானாவில் 3000 கிலோ வெடிபொருள்கள் பிடிபட்டதற்கும் கார் வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல்...

கிழக்கு நியூஸ்

தில்லியில் நடந்த கார் வெடிப்பு தற்கொலைத் தாக்குதலா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழ் தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று (நவ. 10) மாலை 7 மணி அளவில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஐ 20 கார் திடீரெனத் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களில் அடுத்தடுத்து தீப்பிடித்தது. மேலும் அந்த வழியில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் இதனால் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில் 24-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தில்லி காவல்துறை, தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் ஆய்வைத் தொடங்கிய காவல்துறையினர் வெடித்துச் சிதறிய கார் யாருடையது என்பது உள்ளிட்ட தகவல்களை ஆராய்ந்தனர். மேலும் அப்பகுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக நேற்று ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 3000 கிலோ வெடி பொருள்களை ஜம்மு காஷ்மீர் மாநில காவலர்கள் பறிமுதல் செய்திருந்த நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் நடந்ததால் தில்லி காவலர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து ஹரியானாவில் வெடி பொருள்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் மூன்று பேரிடம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடித்துச் சிதறிய காருக்குள் அதனை இயக்கி வந்த மருத்துவர் உமர் முகம்மது என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயாரைக் கைது செது காவலர்கள் விசாரித்து வருகின்றனர். வெடித்துச் சிதறிய காரில் அமோனியம் நைட்ரேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தற்கொலைத் தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தில்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு காவல்துறை உள்ளிட்ட துறைகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை நடத்தினர். அதில் ஹரியானாவில் 3000 கிலோ வெடி பொருள்கள் பிடிபட்டதால் தற்கொலை தாக்குதலுக்குத் திட்டமிட்டு இதனைச் செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் அவரிடம் கூறியதாகத் தெரிய வருகிறது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்புப் காவல்துறை, தில்லி காவல்துறை, தடயவியல் நிபுணர்கள் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, துரிதமாக ஆய்வுகளை மேற்கொள்ள அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

The NIA has initiated an investigation near Delhi's Red Fort, as the car explosion is suspected to be a suicide attack. Delhi Police have registered a case under Sections 16 and 18 of the Unlawful Activities (Prevention) Act, various sections of the Explosives Act, and the BNS.