தில்லி மழை - கோப்புப்படம் ANI
இந்தியா

தில்லியில் தொடர் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Red Alert | IMD | Delhi

இன்று (ஆக 9) முழுமைக்கும் தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

தில்லி-என்.சி.ஆரில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரக்ஷா பந்தன் நாளான இன்று தேசிய தலைநகரம் ஸ்தம்பித்தது. இருப்பினும், விமான சேவைகளில் குறைந்த அளவிலான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று தில்லி முழுமைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாள் முழுவதும் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விமான தாமதங்கள் குறித்து பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (ஐஜிஐ) அறிவுறுத்தியுள்ளது.

`இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பின்படி தில்லி மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. இருப்பினும், தற்போதைய செயல்பாடுகள் இயல்பாக உள்ளன’ என்று ஐஜிஐ விமான நிலையம் வெளியிட்ட ஆலோசனை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், யூனியன் பிரதேசத்தின் வெப்பத்தை குறைக்க இந்த கனமழை பெரிதும் உதவியுள்ளது.

பல பகுதிகளில், நேற்று (ஆக. 8) இரவில் தொடங்கிய மழை இன்று காலை வரை அதே தீவிரத்துடன் பெய்துள்ளது. இதனால் நகரத்தில் இருக்கும் பல்வேறு சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. தெருக்கள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கன்னோட் பிளேஸ், மதுரா சாலை மற்றும் பிரகதி மைதான் போன்ற தில்லியின் பல பரபரப்பான சந்திப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இடைவிடாத மழையால், யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு அபாயக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று அப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக பிரகதி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.