தில்லி சட்டப்பேரவை - கோப்புப்படம் ANI
இந்தியா

அனைத்து தில்லி எம்.எல்.ஏ.க்களுக்கும் ஐபோன்: பின்னணி என்ன? | Delhi Assembly | E Vidhan

ஐபோன்கள் தவிர, முதலமைச்சர் ரேகா குப்தா உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ஐபேட்களும், டேப்லெட்டுகளும் வழங்கப்பட்டன.

ராம் அப்பண்ணசாமி

அரசாங்கத்தின் காகிதமற்ற முயற்சியை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 70 பேருக்கும் அவர்களது அதிகாரபூர்வ பயன்பாட்டிற்காக இந்த வாரம் புத்தம் புதிய ஐபோன் 16 ப்ரோ ரக கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் `ஒரு நாடு, ஒரு பயன்பாடு’ திட்டத்தின் கீழ் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சியான தேசிய இ-விதான் பயன்பாட்டை (NeVA) டெல்லி சட்டப்பேரவை அறிமுகப்படுத்தியதன் ஒரு பகுதியாக, இந்த நேர்த்தியான ஐபோன்கள் நேற்று (ஆக. 4) வழங்கப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐபோன்கள் தவிர, முதலமைச்சர் ரேகா குப்தா உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ஐபேட்களும், டேப்லெட்டுகளும் வழங்கப்பட்டன.

நடப்பாண்டு தில்லி சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மேற்கொள்ளப்பட்ட இந்த விநியோகம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது புதிய கைபேசிகள் மற்றும் டேப்லெட்களுடன் கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர் என்று சட்டப்பேரவை செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மைக்ரோஃபோன்கள் மற்றும் வாக்களிப்பு பேனல்கள் அடங்கிய ஸ்மார்ட் டெலிகேஷன் யூனிட்கள், நிகழ்நேர ஆவண அணுகல், உயர் தெளிவுத்திறன் கேமராக்களை கொண்ட தானியங்கி அமைப்பு போன்ற வசதிகளை உள்ளடக்கிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த மாதம் பயிற்சி பெற்றனர்.

தில்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான கைபேசி வாங்கும் உச்சவரம்பு கடந்த மாதம், ரூ. 50,000-ல் இருந்து முறையே ரூ. 1.5 லட்சம் மற்றும் ரூ. 1.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.