ANI
இந்தியா

சிபிஐ-யால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்

சிபிஐ கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்ததால் இடைக்கால ஜாமீன் கிடைத்தும் திஹார் சிறையில் இருந்து அவரால் வெளியே வர முடியவில்லை

ராம் அப்பண்ணசாமி

கடந்த மார்ச் 21-ல் தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் தில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால். இந்நிலையில் கடந்த ஜூன் 26-ல் தில்லி மதுபான கொள்கை தொடர்பான மற்றொரு வழக்கில் கெஜ்ரிவாலைக் கைது செய்தது சிபிஐ.

அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் கடந்த ஜூலை 12-ல் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஆனால் சிபிஐ-யும் கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்ததால் இடைக்கால ஜாமீன் கிடைத்தும் திஹார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலால் வெளியே வர முடியவில்லை.

சிபிஐ-யின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரியும் தில்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனு தாக்கல் செய்திருந்தார் கெஜ்ரிவால்.

இந்த மனுக்கள் மீது தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `இந்த வழக்கின் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் இது ஒரு காப்புறுதி கைதாகும். கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ய விரும்பவில்லை, அதனிடம் கைதுக்கான தெளிவான நோக்கமோ, பொருளோ இல்லை.

ஆனால் பிற வழக்குகளில் (அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்கு) கேஜ்ரிவால் வெளியே வந்துவிடுவார் என உணர்ந்தது சிபிஐ. அதனால் அவரைக் கைது செய்தது. கெஜ்ரிவால் ஒரு முதல்வர், அவர் தீவிரவாதி அல்ல. அவர் யாரையும் கடத்தவில்லை’ என்று வாதாடினார்.

கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்ததும், இவை மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது தில்லி உயர் நீதிமன்றம். மேலும் சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 29-ல் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது உயர் நீதிமன்றம்.