அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்)
அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்) 
இந்தியா

கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மார்ச் 22-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது.

அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவருடைய அமலாக்கத் துறை காவலை ஏப்ரல் 1 வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்வதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சசி ரஞ்சன் குமார் சிங் மூலம் சுர்ஜிக் சிங் யாதவ் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்கள்.