ANI
இந்தியா

சிபிஐ கைதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

ராம் அப்பண்ணசாமி

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம். சிபிஐ கைது செய்துள்ள வழக்கில் ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் தாக்கல் செய்த மற்றொரு மனுவையும் தள்ளுபடி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்.

கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் `தகுந்த காரணமில்லாமல் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவையும், சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவையும் கடந்த ஜூலை மாதம் விசாரித்து முடித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா.

கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, `இந்த மதுமான கொள்கை ஊழலில் முக்கிய சூத்திரதாரி அரவிந்த் கெஜ்ரிவால். ஊழல் வழக்கு குறித்த விசாரணை நடைபெற்றபோது இதில் கெஜ்ரிவால் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன’ என்றார் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்.

கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தாலும், `அவர் விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா.

மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த ஜூன் 26-ல் தில்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் கைது செய்தது சிபிஐ.